குறளும் - இனியவை நாற்பதும்
கடவுள் வாழ்த்து தவிர்த்த 40 பாடல்களுள், பாதிக்கும் மேலாக 23 பாடல்களில் குறள் கருத்துக்களுக்கு நிகரான கருத்துகள் உள்ளன. ஒரு சில பாடல்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட குறள் கருத்துகளையும் அடையாளம் காட்டுவதால், 33 குறள் சொல்லும் பொருட்களை அடையாளம் காண இயல்கிறது.
இவை கீழ்க்காணும் அதிகாரங்களின் குறள்களாகும்:
1. அறன் வலியுறுத்தல், 2. மானம், 3. இரவு, 4. இன்னா செய்யாமை, 5. ஒழுக்கமுடைமை, 6. ஒற்றாடல், 7. தெரிந்து தெளிதல், 8. தெரிந்துவினையாடல், 9. பிறனில் விழையாமை, 10. புதல்வரைப் பெறுதல், 11. அரண், 12. அவை அஞ்சாமை, 13. அழுக்காறாமை, 14. அன்புடைமை, 15. ஆள்வினை உடைமை, 16. இல்வாழ்க்கை, 17. ஊக்கமுடைமை, 18. கல்லாமை, 19. கல்வி, 20. நிலையாமை, 21. புலால் மறுத்தல், 22. பேதைமை, 23. பொருள் செயல் வகை, 24. மடியின்மை, 25. விருந்தோம்பல், 26. வினைசெயல்வகை, 27. வெஃகாமை.
திருக்குறள் - ஒப்பீடு:
ஒப்ப முடிந்தால் மனை வாழ்க்கை முன் இனிது [பாடல்: 02]
"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று" (குறள் - 46)
***
ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே [பாடல்: 04]
"தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙன மாளு மருள்" (குறள் - 251)
***
ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே [பாடல்: 06]
"ஒல்லும் வகையான் அறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்" (குறள் - 33)
***
அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே [பாடல்: 07]
"மறப்பினு மோத்து கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்" (குறள் - 134)
***
பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே [பாடல்: 07]
"அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி" (குறள் - 506)
***
தந்தையேஆயினும் தான் அடங்கான் ஆகுமேல்
கொண்டு அடையான் ஆகல் இனிது [பாடல்: 07]
"ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்" (குறள் - 834)
***
தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெம் சமத்து
கார் வரை போல் யானை கதம் காண்டல் முன் இனிதே [பாடல்: 08]
"குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்பவான் வினை" (குறள் - 758)
***
பங்கம் இல் செய்கையர் ஆகி பரிந்து யார்க்கும்
அன்புடையர் ஆதல் இனிது [பாடல்: 09]
"என்பி லதனை வெயில்போலக் காயுமே
யன்பி லதனை யறம்" (குறள் - 77)
***
உயிர் சென்று தாம் படினும் உண்ணார் கைத்து உண்ணா
பெருமை போல் பீடு உடையது இல் [பாடல்: 11]
"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து" (குறள் - 90)
***
கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே [பாடல்: 12]
"உளரெனினும் இல்லாரோடொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்" (குறள் - 730)
***
மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிதே [பாடல்: 13]
"தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையி னிழிந்தக் கடை" (குறள் - 964)
"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்" (குறள் - 969)
***
ஊனம் ஒன்று இன்றி உயர்ந்த பொருள் உடைமை
மானிடவர்க்கு எல்லாம் இனிது [பாடல்: 13]
"கேடில்விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை" (குறள் - 400)
"தம்மிற்றம் மக்களறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது" (குறள் - 68)
***
குழவி தளர் நடை காண்டல் இனிதே
அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே [பாடல்: 14]
"குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்" (குறள் - 66)
***
பிறன் மனை பின் நோக்கா பீடு இனிது [பாடல்: 15]
"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு" (குறள் - 148)
"அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று" (குறள் - 150)
***
நட்டார்க்கு நல்ல செயல் இனிது எத்துணையும்
ஒட்டாரை ஒட்டி கொளல் அதனின் முன் இனிதே [பாடல்: 17]
"நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்" (குறள் - 679)
***
பற்பல தானியத்ததாகி பலர் உடையும்
மெய் துணையும் சேரல் இனிது [பாடல்: 17]
"கொற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண்" (குறள் - 745)
"எல்லாப் பொருளும் உடைத்தா யிட
நல்லா ளுடைய தரண்" (குறள் - 746)
***
கைவாய் பொருள் பெறினும் கல்லார்கண் தீர்வு இனிதே [பாடல்: 25]
"விலங்கொடு மக்களனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்" (குறள் - 410)
***
மானம் பட வரின் வாழாமை முன் இனிதே [பாடல்: 27]
"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்" (குறள் - 969)
***
ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன் இனிதே [பாடல்: 28]
"அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று" (குறள் - 515)
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்" (குறள் - 517)
***
ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியில் தேர்வு இனியது இல் [பாடல்: 28]
"ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்" (குறள் - 139)
***
உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே [பாடல்: 29]
"ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும் அசைவு இலா
ஊக்கம் உடையான் உழை" (குறள் - 594)
***
எளியர் இவர் என்று இகழ்ந்து உரையாராகி
ஒளி பட வாழ்தல் இனிது [பாடல்: 29]
"இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ள
முள்ளு ளுவப்ப துடைத்து" (குறள் - 1057)
***
கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே [பாடல்: 31]
"அறியகற் றாசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இம்மை அரிதே வெளிறு" (குறள் - 503)
***
தெற்றெனவு இன்றி தெளிந்தாரை தீங்கு ஊக்கா
பத்திமையின் பாங்கு இனியது இல் [பாடல்: 32]
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்" (குறள் - 314)
***
தானே மடிந்து இரா தாளாண்மை முன் இனிதே [பாடல்: 33]
"தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு" (குறள் - 613)
"மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்" (குறள் - 602)
***
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரிதல் மாண்பு இனிதே [பாடல்: 35]
"ஒற்றினா னொற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்" (குறள் - 583)
"ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்" (குறள் - 589)
***
அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே [பாடல்: 36]
"அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி யுய்த்து விடும் " (குறள் - 168)
***
செவ்வியனாய் செற்று சினம் கடிந்து வாழ்வு இனிதே [பாடல்: 36]
"சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னும்
ஏமாப் புணையைச் சுடும்" (குறள் - 39)
***
கவ்வி தாம் கொண்டு தாம் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது [பாடல்: 36]
"நடுவின்றி நன்பொருள்வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்" (குறள் - 171)
***
பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே [பாடல்: 39]
"இரப்பான் வெகுளாமை வேண்டும்நிரப்பிடும்பை
தானேயுஞ் சாலுங் கரி" (குறள் - 1060)
***
துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே [பாடல்: 39]
"புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சி லிருந்த வுயிர்க்கு" (குறள் - 340)
***
உற்ற பொலிசை கருதி அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது [பாடல்: 39]
"சிறப்பீனுஞ் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்
காக்க மெவனோ உயிர்க்கு" (குறள் - 31)
***
பற்பல நாளும் பழுது இன்றி பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல் [பாடல்: 40]
"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து" (குறள் - 318)
***
______________________________________________________
No comments:
Post a Comment