இனியவை நாற்பது குறிப்பிடும் இனியவை
— தேமொழி —
'நானாற்பது' என அறியப்படும், பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள 'நாற்பது' எனமுடியும் பெயர்கொண்ட நான்கு நூல்களுள் இரண்டாவது நூல், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எழுதிய 'இனியவை நாற்பது' என்ற நூல். ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு 'நன்மை தருவனவற்றை' அல்லது 'இன்பம் தருவனவற்றை', 'இனியவை' எனக் கூறும் 40 பாடல்கள் கொண்ட தொகுதி என்பதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது. 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்ற பெயர்களும் இந்த நூலையே குறிக்கும்.
இனியவை நாற்பதின் கடவுள் வாழ்த்துப் பாடல் மும்மூர்த்திகளான சிவன், திருமால், பிரம்மா ஆகியோரை வணங்குதல் இனிது எனக் கூறுகிறது. பிரம்மாவைக் குறித்துக் குறிப்பிடுவதாலும், இன்னா நாற்பது கருத்துகளினை அடியொட்டி எழுதப்பட்டுள்ள கருத்துகளாலும் இந்த நூல் இன்னா நாற்பது நூலுக்குப் பிறகு தோன்றியது என்றும் எட்டாம் நூற்றாண்டு காலத்தது எனவும் கணிக்கப்படுகிறது.
கடவுள் வாழ்த்து தவிர்த்து 40 பாடல்கள் இனியவை நாற்பது நூலில் உள்ளன. பஃறொடை வெண்பா வடிவில் அமைந்த ஒரு பாடல் ('ஊரும் கலிமா' எனத் தொடங்கும் 8 ஆம் பாடல்) தவிர்த்து ஏனைய பாடல்கள் இன்னிசை வெண்பா வடிவில் அமைந்த பாடல்கள். ஒவ்வொரு பாடலும் வாழ்க்கைக்கு நன்மை தருவனவற்றை இனியவை எனக் கூறிச் செல்கின்றன.
இன்னா நாற்பது பாடலின் நான்கு வரிகளில், வரிகளுக்கு ஒன்றாக ஒவ்வொரு பாடலும் நான்கு துன்பம் தருவனவற்றைக் கூறியதால் கடவுள் வாழ்த்தும் ஏனைய நாற்பது பாடல்களும் மொத்தம் 164 இன்னாதவற்றைக் கூறின. ஆனால், இனியவை நாற்பது நூல் முழுவதும் அது போன்ற சீரான முறையில் அமைந்திருக்கவில்லை. அதனால் மொத்தம் 127 இனியவையாகக் கூறப்பட்டுள்ளன. நான்கு பாடல்கள் (1, 3, 4, 5) வரிக்கு ஒன்றாக 4 இனியவற்றைக் கூறினாலும், மற்ற 37 பாடல்களில் முதல் இரு வரிகளும் கடைசி வரியும் இனியவை என 3 இனியனவற்றைக் குறிப்பிடுகின்றன. இன்னா நாற்பது போலவே இனியவை நாற்பதிலும் கடவுள் வாழ்த்து மட்டுமே கடவுளைக் குறிப்பிடும் பாடல். மற்ற பாடல்களில் சமயக் குறிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
இன்னா நாற்பது பாடல்களில் காணப்படுவது போலவே;
"யானையுடை படை காண்டல் மிக இனிதே" [பாடல் - 4]
என்று யானைப்படை கொண்டிருப்பதன் சிறப்பு போன்ற காலத்திற்குப் பொருந்திடாத கருத்தும்,
"ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே" [பாடல் - 23]
என்று பார்ப்பனருக்குக் கொடை அளிப்பது நன்மை தரும் என்ற காலத்திற்கு ஒவ்வாத கருத்தும்,
"தட மென் பணை தோள் தளிர் இயலாரை விடம் என்று உணர்தல் இனிது" [பாடல் - 37]
என்று பெண்மையைப் போற்றாது பெண்களை நஞ்சுடன் ஒப்பிடும் கருத்தும்
தவிர்த்தால் அறநெறி வழி நடக்க நூற்றுக்கும் குறையாத அறிவுரைகள் இனியவை நாற்பது பாடல்களில் உள்ளன.
பூதஞ்சேந்தனார் இயற்றிய 'இனியவை நாற்பது'—
திரு. வா. மகாதேவ முதலியாரவர்கள் உரை, 1922,
திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.
தமிழ் இணையக் கல்விக்கழகம் - பதிப்பு:
http://www.tamilvu.org/library/l2500/html/l2500bod.htm
நன்றி:
தமிழ் இலக்கியத் தொடரடைவு - முனைவர்.ப.பாண்டியராஜா
http://tamilconcordance.in/TABLE-INIYA40-TEXT.html
___
No comments:
Post a Comment